திருக்கோயில் சிறப்பு :

மறுநாளே செட்டியார் வண்ணையம்பதி சென்று தமக்குத் தெரிந்த ஒரு ஸ்தபதியாரிடம் பழநி ஆண்டவர் சிலையொன்று செய்யும்படி ஏற்பாடு செய்தார். அண்ணாசாமித் தம்பிரானின் திருஉலக் குறிப்பின்படி கோயில் திருப்பணியை முன்நின்று செய்யத் தொடங்கினார். குறிமேடைக்கு அருகில், இப்போது வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் கருவறைப்பகுதி உள்ள இடத்தில், செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் ஒன்று அமைக்கப் பெற்றது. அன்பர்கள் பலர் செய்த பொருளுதவியினால் திருப்பணி விரைவில் நிறைவேறியது. இது சுமார் கி.பி.1865-ம் ஆண்டாக இருக்கலாமென தெரிகிறது. இந்நிலையில் திடீரென்று ஒருநாள் ஆவணி மாதம் அமாவாசைத் திதி, மக நட்சத்திரத்தன்று அண்ணாசாமித் தம்பிரான் ஆண்டவர் திருவடியை அடைந்துவிட்டார்.


ஒருநாள் இரத்தினசாமி செட்டியார் கனவில் ஸ்ரீ அண்ணாசாமி தம்பிரான் தோன்றி அவரையும் தம்மை போலவே ”பாவாடம்” தரித்துக் கொள்ளுமாறு பணிந்தார். அவ்வாறே ஆடிக்கிருத்திகை அன்று இரத்தினசாமி செட்டியாரும் பாவாடம் தரித்துக் கொண்டார். அடுத்த கிருத்திகை முதல் இரத்தினசாமி தம்பிரானும் ஆவேசமுற்றுக் குறி சொல்லும் ஆற்றல் பெற்றார். பின் சில நாட்களில் அண்ணாசாமி தம்பிரான் விரும்பியபடியே தொடங்கப் பெற்ற கோயில் திருப்பணி சிறப்புற நிறைவேறியது. பழநியாண்டவர் சிலையும் பிரதிஷ்டை செய்யப் பெற்று கும்பாபிஷேகமும் நன்கு நிறைவேறியது. வழக்கம் போல் குறி கேட்க வரும் அன்பர்கள் கொடுக்கும் காணிக்கைப் பொருளைக் கொண்டே இரத்தினசாமி தம்பிரான் திருக்கோயில் பூசை முதலிய செலவுகளை நன்முறையில் நடத்திக் கொண்டு வந்தார். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கோடம்பாக்கம் குறிமேடையை ””வடபழநி ஆண்டவர் கோயில்”” என்று வழங்கும்படி இரத்தினசாமித் தம்பிரான் அனைவரிடமும் கூறி வந்தார். நாளடைவில் வடபழநிக் கோயிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் விரைந்து பரவுவதாயிற்று. 1886-ம் ஆண்டு மார்கழி மாதம் சஷ்டி நாளில் சதய நட்சத்திரத்தன்று ஸ்ரீ இரத்தினசாமி தம்பிரான் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.


அவருக்கு பின்னர் அவரது சீடர் பாக்கியலிங்க தம்பிரான் என்பவர் குருவின் திருவுள்ளக் குறிப்பிற்கேற்ப ”பாவாடம்” தரித்துக் கொண்டு அருள்வாக்கு சொல்லி முன்னவரைப் பின்பற்றினார். இப்போதுள்ள வடபழநி திருக்கோயிலின் கர்ப்ப கிருகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும், கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் ஸ்ரீ பாக்யலிங்கத் தம்பிரான் அவர்களேயாவர். இவர்தம் அரும்பெரும் முயற்சிகளின் பயனாகவே, ஸ்ரீ வடபழநி ஆண்டவர் கோயில் மிகவும் புகழ் பெறுவதாயிற்று, அன்பர்கள் பெருந்திரளாகக் கூடி வந்தனர். கோயில் வளர்ச்சியும் புகழும் நாளடைவில் பெருகின. இந்நிலையில் 1931-ம் ஆண்டு புரட்டாசித் திங்கள் தசமி திதி கூடிய பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ பாக்யலிங்கத் தம்பிரான் பழநியாண்டவர் திருவடியைப் பாங்குற அடைந்தார்.


தென் பழநிக்குச் சென்று தரிசிக்க முடியாதவர்கள் அதன் அம்சமாகவே திகழும் வடபழநி ஆண்டவரை வந்து தரிசித்தால் பழநி ஆண்டவர் அருள்பாலிக்கும் அனைத்து அம்சங்களையும் இந்த வடபழநி ஆண்டவரை தரிசித்து அருள் பெறலாம் என்பது ஐதிகம். பக்தர்கள் அனைவராலும் உணரப்பட்டு அருள்பெறப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. தென்பழநிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்களும், தனது நேர்த்தி கடனை செலுத்த முடியாதவர்களும் வடபழநிக்கு வந்து இறைவனை தரிசிக்கவும், நேர்த்திக் கடனை செலுத்தியும் அதே அருளினை இங்கேயும் பெறும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திருக்கோயிலாகும். தென்பழநி ஆண்டவர் வேண்டுவோருக்கு வேண்டும் வரனை அளிப்பது போல அவர் சார்பில் தமிழகத்தின் வடபகுதியாம் சென்னையில் வடபழநி ஆண்டவராக இருந்து கொண்டு, தென்பழநி ஆண்டவர் அளிக்கும் அனைத்து வரங்களையும் அருளிக் கொண்டு வடபழநி ஆண்டவர் அருள்பாலித்து கொண்டு இருக்கிறார்.


நாளாக நாளாக இத்திருக்கோயிலின் புகழ் மேலும் வளர்ந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளிக்கும் பிரார்த்தனை ஸ்தலமாக உயர்ந்தது. சித்தர்களும், சாதுக்களும், சான்றோர்களும், ஆன்றோர்களும், பக்தர்களும், முக்கியப் பிரமுகர்களும் இத்திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர். பழநிக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து அவர்களின் பழநி மலை முருகனுக்கு நிறைவேற்ற நினைத்த வேண்டுதலை நிறைவேற்றி தென்பழநி முருகனின் அருளை இந்த வடபழநி முருகன் ஆலயத்திலேயே பெற்றுள்ளார்கள் என்பது ஒரு நிதர்சனமான நிகழ்வாகும். பழனி முருகனிடம் வேண்ட நினைத்த காரியங்களையும் வடபழநி ஆண்டவரிடமே வேண்டி அவர் அருளைப் பெற்றவர்கள் ஏராளம்.


இத்திருக்கோயிலை உருவாக்கிய மூன்று சித்தர்களும் சமாதி அடைந்த இடம் இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள நெற்குன்றம் பாதையில் உள்ளது. அந்த இடத்தில் ”சித்தர்கள் ஆலயம்” அமையப்பெற்று ஒரே நேரத்தில் மூவரின் சமாதிகளை தரிசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ”பௌர்ணமி” தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. குரு பூஜையும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.


திருக்கோயிலின் சிறப்பு அத்தலத்தினாலும், மூர்த்திகளினாலும், தீர்த்தங்களினாலாகும். இத்தலம் மூலவர் அருள்மிகு வடபழநி ஆண்டவரின் மூலம் சிறப்பு பெற்றுள்ளதாகும். திருமணத் தடை விலகவும் மற்றும் மக்கட்பேறு பெறவும் சிறந்த கல்வி அறிவு பெறவும், உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கவும் மூலவரையும், அங்காரகனையும் (செவ்வாய்) வழிபாடு செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்பவர்களுக்கு குறைகள் நீங்கி நிவர்த்தி ஏற்படும் என்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பு. தென்பழநிக்கு செல்ல முடியாதவர்கள் வடபழநிக்கு வந்து தங்கள் குறைகளை சொல்லியும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றியும் செல்கின்றனர். அவர்களுக்கு கலியுக வரதனான வடபழநி ஆண்டவர் அருள்பாலிப்பது திண்ணம். இத்தலத்தின் சிறப்பு வேறு எந்த படைவீட்டிலும் காண முடியாதது மூலவர் பாத காலணிகளுடன் அருள்பாலிப்பது. பாத காலணிகள் அணிந்து இருப்பது ஆணவத்தையும், அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது. இத்திருக்கோயிலின் மூலவரின் வலது காலானது சற்று முன்வந்தது போல் காணப்படுவது பக்தர்களின் குறைகளை இக்கலியுகத்தில் விரைந்து வந்து வடபழனி ஆண்டவர் உடன் நீக்குவதாக ஐதீகம்.


இத்திருக்கோயிலின் தல விருட்சம் அத்தி மரம் ஆகும். குழந்தைகள் வரம் வேண்டி அத்தி மரத்தில் பக்தர்கள் தொட்டில் கட்டி வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதலை விரைந்து தீர்த்து வைக்கின்ற காரணத்தால் பிரார்தனை தலமாக உயர்ந்து, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள் காணிக்கையாக பொன், வெள்ளி செலுத்துதலும், வேல், ரொக்கம் போன்றவை உண்டியலில் செலுத்துதலும், புடவை சாத்துதலும், மொட்டையடித்தல், காது குத்துதல், பால்காவடி, புஷ்ப காவடி எடுத்தலும் தனி சிறப்பாகும்.


© பதிப்புரிமை 2017. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், சென்னை.
Designed by ISKY TECHIES