திருக்கோயில் சிறப்பு :

இத்தலத்தில் அருள் பொழியும் முருகன் பாதத்தில் காலணிகள் அணிந்து இருப்பது சிறப்பான ஒன்று. அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு. இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு தங்க தேர் உள்ளது.


தல வரலாறு :

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருத்தலம் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. முதன் முதலில் சிறிய ஓலைக்கூரைக் கொட்டகை அமைக்கப்பட்டு, அதில் முருகனுடைய வண்ண ஓவியப்படம் வைத்து தீவிர முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் வழிபட்டு வந்தார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முருகபக்தரான அவர் திருத்தணி, திருப்போரூர் ஆகிய திருமுருகன் திருத்தலங்களுக்கு, கடும் புயலிலும் மழையிலும் திருடர் இடைமறித்தாலும் கூட தவறாது சென்று வழிபட்டவர். அவரின் கனவில் ஒரு பெரியவர் தோன்றி ”உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கும் போது நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு அல்லல்பட்டு ஓடி வருகின்றாய்? அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே!” என கூறக்கேட்டு, உறக்கத்திலிருந்து திடுமென விழித்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டுக்குத் திரும்ப வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்து அன்று முதல் தம் வீட்டிலேயே காலை, மாலை, இரு வேளைகளிலும் முருகனை நினைத்து வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் தான் சந்தித்த பழநி சாது தெரிவித்தது போன்று திருத்தணியில் முருகன் சன்னதி எதிரில் புதுமையான காணிக்கையாக தனது நாக்கை அறுத்து பாவாடம் தரித்து கொண்ட பின் வயிற்று வலி தீரப் பெற்றார்.


அதன் பிறகு நீண்ட நாள் கனவாக இருந்த, தென் பழநி யாத்திரையின் போது ஞான தண்டாயுதபாணியை மலைமேல் சென்று தரிசித்துக் கொண்டு படிகளின் கீழிறங்கி வந்தார். வழியில் இருந்த படக்கடை ஒன்றில் பழநியாண்டவரின் பெரிய அழகிய படம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது. அதன்பால் அவர் பெறவுமான அதிசயம் நிகழ்ந்தது. அப்படி பழனியில் பெற்ற முருகனின் திருவுருவப் படத்தினை நாயகர் அவர்கள் அந்தப் படத்தை பெருஞ் செல்வமாக மதித்துப் போற்றி எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். தமது குறிமேடையில் அவ்வுருவப்படத்தினை வைத்து பழநி ஆண்டவர் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். சிறிய கீற்றுக் கொட்டகையொன்று போட்டுவித்துத் தம் குடும்பத்தை வேறிடத்திற்கு இடம் பெயரச் செய்தார். பழநி ஆண்டவர் படத்திற்கு பூஜை செய்து வழிபட்டு பக்தர்களுக்கெல்லாம் குறி சொல்லி அவர்களது குறைகளுக்கு தீர்வு சொல்லி வந்தார்.


பாவாடம் - நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று மக்கள் கூறுவர்.


அதன் பிறகு தன்னிடம் தொண்டு செய்து வந்த இரத்தினசாமி செட்டியாரின் அன்பையும் ஆர்வத்தையும் அறிந்த தம்பிரான் சிலகாலம் கழித்து, தமக்குப்பின் இவ்வழிபாட்டைத் தொடர்ந்து செய்யக் கூடியவர் இவரே ஆவர் எனத் தேர்ந்து, இரத்தினசாமி செட்டியாரை அன்புடன் அருகில் அழைத்து “நீர் இங்கேயே இருந்து ஆண்டவருக்குத் தொண்டு செய்தல் இயலுமா?” என்று வினவினார். இரத்தினசாமி செட்டியார் எதிர்பாராத நிலையில் வினா எழவே மிகவும் தயங்கி “அடியேன் குடும்பத்தவன் ஆயிற்றே! என்னால் எங்ஙனம் இயலும்? ஏதேனும் இயன்ற தொண்டுகளை மட்டும் நான் செய்து வருவேன்” என்று பணிவுடன் தெரிவித்தார். அது கேட்ட தம்பிரான் “இக்கீற்றுக் கொட்டகையை மாற்றி இங்கு பழநி ஆண்டவருக்கு ஒரு சிறிய கோயில் கட்ட வேண்டுமென்று என் உள்ளம் விரும்புகின்றது. தாங்கள் இதற்கு ஏதேனும் உதவி செய்தல் இயலுமா? என்றார். உடனே செட்டியார் "அப்படியே செய்யலாம், தாங்கள் விருப்பம் போலவே அன்பர்களுக்கும் இக்கருத்து உள்ளது. தாங்களே வாய்திறந்து பணித்த பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை? இன்றைக்கே கோயில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம். தாங்கள் இசைவு தெரிவித்தால், பழநி ஆண்டவர் சிலை ஒன்றையும் அழகுற அமைப்பித்துத் திருக்கோயில் நிறுவிக் கும்பாபிஷேகமும் விரைவில் செய்துவிடலாம்" என்று மிகவும் பேரார்வத்துடன் தெரிவித்தார். அண்ணாசாமித் தம்பிரான் “ஆண்டவன் பணிக்கு எம்முடைய இசைவு எதற்கு? தங்கள் உள்ளத்தில் தோன்றுகிறபடியே திருப்பணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லிச் செட்டியாருக்கு திருநீறு கொடுத்து அனுப்பி விட்டார்.


மேலும் படிக்க ...
© பதிப்புரிமை 2017. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், சென்னை.